உலகம்

அமெரிக்காவின் முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை- பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்

Published On 2025-07-26 13:07 IST   |   Update On 2025-07-26 13:07:00 IST
  • டி.ஆர்.எப்பை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இணைப்பது தவறானது.
  • அந்த அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானால் அகற்றப்பட்டது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை இயக்கமான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (டி.ஆர்.எப்) பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. அதன்பின் இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது.

அதேவேளையில் இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்தது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முடக்கப்பட்டுவிட்டது என்றும் தாக்குதலில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இயக்கம் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-

டி.ஆர்.எப் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது அந்நாட்டின் இறையாண்மை முடிவு ஆகும். டிஆர்எப்பை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா பட்டியலிடுவதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தாக்குதலில் அந்த இயக்கத்தினர் சம்பந்தப்பட்டதற்கான ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் நாங்கள் வரவேற்கிறோம். டி.ஆர்.எப்பை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இணைப்பது தவறானது. அந்த அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானால் அகற்றப்பட்டது என்றார்.

இதற்கிடையே இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். இதில் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் ஆக்கப்பூர்வமான பங்கை பாராட்டியதாக இஷாக் தார் தெரிவித்தார்.

Tags:    

Similar News