டிரம்பிற்கு நோபல் பரிசு: பரிந்துரையை மறுஆய்வு செய்ய பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
- இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக டிரம்ப் திகழந்ததாக பாகிஸ்தான் பாராட்டு.
- அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரை கடிதம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என அறிவித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு டொனால்டு டிரம்பின் "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" காரணம் என பாகிஸ்தான் பாராட்டியதோடு, அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டையில் ஈரான் அணுஉலை நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள், டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
டிரம்ப்பிடம் நோபல் பரிசு பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தனது பணி, மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை கையெழுத்திட ஏற்பாடு செய்தது உட்பட பல காரணங்களுக்காக தனக்கு அது வழங்கப்பட வேண்டும்.
நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.