டிரம்ப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: இந்தியா மீதான 50 சதவீத வரியை ரத்து செய்ய அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்
- இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
- இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் டிரம்ப் பணிந்தார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியா மீதான 50 சதவீத வரிக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ராஸ், மார்க் வீசே ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்த அதிபர் டிரம்பின் தேசிய அவசர கால அறிவிப்பை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக் கைகள் சட்டவிரோத மானவை மற்றும் அமெ ரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர், இருதரப்பு உறவுகளுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டெபோரா ராஸ் எம்.பி கூறும்போது, வட கரோலினாவின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை ஒரு இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை களை உருவாக்கியுள்ளன.
அதேபோல் வட கரோ லினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, இந்த வரிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா- இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றார். இந்த தீர்மானத்தில் பிரேசில் மீதான வரியையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது.