உலகம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய வடகொரிய வீரர்கள்

Published On 2025-04-28 11:05 IST   |   Update On 2025-04-28 11:05:00 IST
  • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
  • ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மாஸ்கோ:

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சண்டையில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரஷியா வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.


இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது:-

வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இந்த போரில் வடகொரியா வீரர்கள் எத்தனை பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் உயிர் இழந்தவர்கள் விவரம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லை.

ஆனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷிய படையுடன் இணைந்து போரிட்டு வருவதாக தென் கொரியா உளவுத்துறை தெரிவித்து இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போரில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக கூறி இருந்தார். தற்போது இது நிரூபணம் ஆகி உள்ளது.

Tags:    

Similar News