உலகம்

அப்பீல் செய்ய அனுமதி மறுப்பு... நிரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு

Published On 2022-12-15 14:19 GMT   |   Update On 2022-12-15 14:19 GMT
  • நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
  • உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கேட்டு நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார்.

லண்டன்:

இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டதால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர். அதேநேரம் இந்தியாவில் நீரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.

இந்த விசாரணையின் போது, ஐகோர்ட் நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று தெரிவித்தனர். மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது.

இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதற்கேற்ப தனக்கு 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும், லண்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதன்மூலம், நீரவ் மோடிக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News