உலகம்

சிறைவாச புகைப்படத்தை தானே வெளியிட்ட டிரம்ப்: வியந்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க்

Published On 2023-08-25 08:56 GMT   |   Update On 2023-08-25 08:56 GMT
  • டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
  • புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்

அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.

அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.

சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.

அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.

அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.

அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.

சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.

உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News