உலகம்
நியூ ஜெர்சியில் 20 ஆண்டில் இல்லாத பயங்கர காட்டுத்தீ: முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்
- நியூ ஜெர்சி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
- காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது.
கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் இருந்து 5,000-க்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதையடுத்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.