உலகம்

13 ஆயிரம் பேர் அகதிகளாகும் அவலம்: அர்மேனியா அஜர்பைஜான் போர் எதிரொலி

Published On 2023-09-26 09:33 GMT   |   Update On 2023-09-26 09:33 GMT
  • நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
  • 2020ல் 6 வாரங்கள் நடைபெற்ற போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்

ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது.

இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர். கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது.

இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

Tags:    

Similar News