அமெரிக்காவில் பரபரப்பு: துணை அதிபர் வீட்டை தாக்கிய மர்ம நபர்
- அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
- இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வார இறுதி விடுமுறைக்காகச் சின்சினாட்டி வந்திருந்தனர். சின்சினாட்டியின் ஓஹியோ பகுதியில் உள்ள வான்ஸின் வீட்டினருகே நேற்று நள்ளிரவு திடீரென சத்தம் கேட்டது.
அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் உடனே சென்று பார்த்தனர். அப்போது வில்லியம் டிஃபோர் என்பவர் கையில் வைத்திருந்த சுத்தியலால் வீட்டின் ஜன்னல்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கினார்.
வீட்டின் 4 ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த அதிகாரிகளின் வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தினார். இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்து அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.