உலகம்

கார் மீது பைக், லாரி, பஸ் மோதும்... ஆனால், விமானம்?

Published On 2023-11-14 16:41 IST   |   Update On 2023-11-14 16:41:00 IST
  • கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி ஓட தொடங்கியது
  • இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது

அமெரிக்காவின் தென்மத்திய பகுதியில் உள்ள மாநிலம் டெக்ஸாஸ் (Texas).

டெக்ஸாஸ் மாநில டல்லாஸ் (Dallas) நகருக்கு 531 கிலோமீட்டர் மேற்கே உள்ள மிட்லேண்டு எனும் நகரிலிருந்து ஒரு சிறு ரக புரொபெல்லர் விமானம் (propeller plane) புறப்பட்டது. அந்த விமானத்தை, விமானி, புறநகரான மெக்கின்னி (McKinney) பகுதியை சேர்ந்த ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் (Aero Country Airport) தரையிறக்க முயன்றார். அவ்விமானத்தில் விமானியுடன் மேலும் ஒரு பயணி இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

அதை தொடர்ந்து அந்த விமானம், விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வேகமாக விலகி சென்று அங்குள்ள சிறு தடுப்பு ஒன்றில் மோதியது. அதன் பிறகும் நிற்காமல் அங்கிருந்து அருகில் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது அதன் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது.

அங்கிருந்தும், நேராக சென்ற அந்த விமானம், செங்குத்தான திசையில் வந்து கொண்டிருந்த ஒரு செடான் ரக கார் மீது மோதியது.

இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த ஜேக் ஸ்னைடர் என்பவர் வீடியோ படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவைக்கான மருத்துவ பணியாளர்கள், விமானத்தில் இருந்தவர்களையும், காரில் இருந்த ஓட்டுனரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் பயணித்தவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏதுமில்லை.

மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விபத்து குறித்து தீவிரமாக விசாரணை அறிவித்து வருகிறது.

Tags:    

Similar News