நாடு திரும்பியநிலையில் வங்காளதேச வாக்காளராக பதிவு செய்துகொண்ட முன்னாள் பிரதமர் மகன்
- 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார்.
- 24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளதேச தேசிய கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமானவர் கலீதா ஜியா. 2006-ம் ஆண்டில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கலீதா ஜியா, அவருடைய மூத்த மகன் தாரிக் ரகுமான் (வயது 60) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டநிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தவாறே வங்காளதேச தேசிய கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த பொதுதேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
அவர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவத்தின் ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.
கலீதா ஜியாவின் உடல்நலத்தை காரணம் காட்டி தற்போதைய அரசு சிறையில் இருந்து அவரை விடுவித்தது. வரும் ஆண்டு (2026) பிப்ரவரி 12-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதமர் தேர்ந்தேடுக்கப்படுவார் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
இந்த பொதுத்தேர்தலில் வங்காளதேச தேசிய கட்சி சார்பாக தாரிக் ரகுமான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது.
இந்தநிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார். மனைவி மற்றும் மகளுடன் டாக்கா விமானநிலையத்திற்கு தனிவிமானம் மூலமாக வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
17 ஆண்டுகளுக்கு பிறகு அவர், மகள் சைமா ரகுமானுடன் வங்காளதேசத்தின் வாக்காளர் அட்டை பெறுவதற்காக நேற்று பதிவு செய்து கொண்டார்.
24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாரிக் ரகுமான் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு சட்ட ரீதியான எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
2009 தேர்தலில் தாரிக் ரகுமானின் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கேலிகூத்தாக உள்ளதாக அவாமி லீக் குற்றம்சாட்டி உள்ளது.