உலகம்

செவித்திறன் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க 8000 கி.மீ. பறக்கும் இங்கிலாந்து மருத்துவர்கள்

Published On 2024-03-03 16:31 IST   |   Update On 2024-03-03 16:31:00 IST
  • இங்கிலாந்திலிருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி
  • நலிவடைந்த நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ளனர் என்றார் டாக்டர். ரெயின்

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford) நகரம்.

இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை நிபுணர்களும் (audiologists), தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

இங்கிலாந்திலிருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி மலாவி பகுதியில் உள்ள ஈஎன்டி மருத்துவர்களுக்கும் ஈஎன்டி சிகிச்சையளிப்பதில் உள்ள நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


இது குறித்து பேராசிரியர். டாக்டர் ரெயின் கூறியதாவது:

செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய்.

இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான "காக்லியர் இம்ப்லேன்ட்" (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை "மெட்எல்" (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

வளர்ச்சியடைந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டிற்கு சென்று பெரும் மருத்துவத்தொண்டில் 10 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் பிராட்ஃபோர்டு மருத்துவ குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Tags:    

Similar News