கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது: டொனால்டு டிரம்ப்
- கமலா ஹாரிஸ்க்கு எதிராக நான் வெற்றி பெற்றதை கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது.
- இதனால் அவர் உடனடியாக 2-வது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு தடை ஆகியவற்றை பற்றி இரண்டு பேரும் காரசார விவாதம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவை சீர்குலைத்தவர். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் என டொனால்டு டிரம்ப்-ஐ கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.
அதேவேளையில் கமலா ஹாரிஸ் ஒரு மார்சிஸ்ட். அவர் இஸ்ரேலை வெறுக்கிறார் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.