உலகம்

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!.. என்ன நோக்கம்?

Published On 2025-08-16 19:36 IST   |   Update On 2025-08-16 19:36:00 IST
  • இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
  • சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் காட்சிகள் மாறி வருகின்றன.

ஜூன் 2020 இல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பகையை மறந்து இந்தியா சீனாவுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டுக்கு பிரதமர் மோடி பயணப்படுகிறார். இதற்கிடையே நிறுத்திவைக்கப்பட்ட இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, வாங் யி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து முக்கியமாக எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிப்பார். பின்னர், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக அஜித் தோவல் டிசம்பரில் சீனாவுக்குச் சென்று வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் வெடித்த மோதலில் சீனா தங்களுக்கு உதவியதாக பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News