உலகம்

இந்தியாவுக்கு எதிராக போலி பிரசாரம் செய்த சீனா.. அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2025-11-20 18:40 IST   |   Update On 2025-11-20 18:40:00 IST
  • சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பரப்பி வருகிறது.
  • கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் நிபுணர் குழு தனது ஆண்டறிகையில் தெரிவித்துள்ளது.

அறிக்கைப்படி, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.

இதற்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாகவும், இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் உலகளவில் ரஃபேல் போர் விமானங்கள் மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அறிக்கை நம்புகிறது.

அதே நேரத்தில், சீனா தனது சொந்த J-35 போர் விமானங்களுக்கான தேவையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நேரடி இராணுவ மோதல் இல்லாமல் புவிசார் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த சீனா உத்திகளை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News