உலகம்

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி கல்லூரி மாணவரா?- புகைப்படங்களை வெளியிட்ட FBI - தலைக்கு ரூ.88 லட்சம் பரிசு

Published On 2025-09-12 09:50 IST   |   Update On 2025-09-12 13:28:00 IST
  • சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
  • இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே துப்பாக்கி வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட அவர் மேடையில் சரிந்து விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் கூரையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து குதித்து தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது.

குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் இருந்து ஒரு உயர் சக்தி கொண்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக FBI சிறப்பு முகவர் ராபர்ட் போல்ஸ் தெரிவித்தார்.

இது தவிர, அங்கிருந்து ஷூ ரேகைகள் மற்றும் கை ரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சந்தேக நபர் கல்லூரி பயிலும் வயதுடையவராகத் தோன்றியதாகவும், அவரது பல காட்சிகளைப் போலீசார் பெற்றுள்ளதாகவும் உட்டா டிபிஎஸ் ஆணையர் பியூ மேசன் தெரிவித்தார். 

மேலும் புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 100,000 டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News