உலகம்

வடக்கு காசாவில் உணவு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி மீது தாக்குதல்: உதவி கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Published On 2024-02-06 04:58 GMT   |   Update On 2024-02-06 04:58 GMT
  • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
  • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

காசா:

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News