உலகம்

டெல்லியில் உள்ள தூதரகம் நிரந்தரமாக மூடல்: ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

Published On 2023-11-24 03:17 GMT   |   Update On 2023-11-24 03:17 GMT
  • கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.
  • தூதரகத்தை மூடுவதற்கான மூன்று முக்கிய காரணங்களை ஆப்கானிஸ்தான் தெரிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுத்து வந்தன.

இதற்கிடையே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

அப்போது,

இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை.

இந்தியாவிடமிருந்து ஆதரவு இல்லாததாலும், ஆப்கானிஸ்தானில் முறையான அரசாங்கம் இல்லாததாலும், ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. குழுவிற்குள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இது வேலையை பாதிக்கிறது.

ஆகிய மூன்று காரணங்களை கூறியிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News