உலகம்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்- 13 பேர் பலி

Published On 2023-03-22 09:47 GMT   |   Update On 2023-03-22 09:47 GMT
  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
  • வட மாநிலங்களில் நில நடுக்க பீதியில் மக்கள் இரவு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தான் எல்லையில் உள்ளது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 புள்ளிகளாக பதிவானது. 188 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து அதனை சுற்றி 1000 கி.மீ. வரை அதிர்வு ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானில் கடுமையாக நில நடுக்கம் உண்டானது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நில நடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வீடுகள் இடிந்து விழுந்தன. ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தானில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர், ராவல் பிண்டி உள்ளிட்ட நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டன.

பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் 13 பேர் பலியாகி உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் 11 பேரும், ஆப்கானிஸ்தானில் 2 பேரும் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் மட்டும் 9 பேர் இறந்தனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாகிஸ்தானில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வர கிறார்கள். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நில நடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். நில நடுக்கம் நின்ற பிறகும் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலேயே இரவு முழுவதும் அமர்ந்து இருந்தனர்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடுகளான இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் சீனா, உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது.

டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக நில நடுக்கம் பதிவானது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

மக்கள் பீதியுடன் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதே போல் பல வட மாநிலங்களில் நில நடுக்க பீதியில் மக்கள் இரவு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் வட மாநிலங்களில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

வட மாநிலங்களில் நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

Tags:    

Similar News