உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு, 28 பேர் படுகாயம்

Published On 2025-11-24 12:49 IST   |   Update On 2025-11-24 12:49:00 IST
  • தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன.
  • பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் 2 ஆண்டு களுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போரின் போது காசா நகரம் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த போரின் போது ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. மூத்த ஹிஸ்புல்லா படை தலைவரான அலி தப்தாவை குறிவைத்து அங்குள்ள கட்டிடம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 9 மாடி கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர். 28 போ் படுகாயம் அடைந்தனா். இதை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன. தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதம் அடைந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மீட்பு படையினர் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் லெபனான் வீரர்கள் குவிக்கப்பட்டனர். கட்டிடத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஹரேத் ஹிரீக் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஹிஸ்புல்லா படையினர் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியதாக கூறியுள்ளது. 'பெய்ரூட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பையும், மறுசீரமைப்பையும் வழி நடத்தி வந்த ஹிஸ்புல்லா தலைமை தளபதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தனது நோக்கங்களை அடைவதற்கான செயல்பாட்டில் உறுதியாக உள்ளது' என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், 'இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்தும் எவரின் கையும் வெட்டப்படும், இஸ்ரேலின் அதிகபட்ச அமலாக்க கொள்கை தொடரும்' என்று எச்சரித்தார்.

ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் ஆயுதங்களை ஏந்தக்கூடாது, அந்த படை மீண்டும் கட்டமைக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஓன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News