உலகம்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல்: 3 பேர் பலி

Published On 2022-08-07 03:05 GMT   |   Update On 2022-08-07 03:05 GMT
  • மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
  • இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி 12 பேர் இறந்துள்ளனர்.

வாஷிங்டன் :

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயரிழந்திருப்பதாக வாஷிங்டன் போலீஸ் நேற்று அறிவித்தது. வெள்ளை மாளிகையின் வட பகுதியில் உள்ள லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்கியதில் 70 வயது தாண்டிய ஒரு தம்பதியரும், 29 வயதான ஒரு ஆணும் பலியாகி இருப்பதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்தது.

இதுபற்றி வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கேரின் ஜீன் பியாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்குதலில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளோம். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் உள்ள குடும்பங்களுடன் எங்கள் இதயங்கள் இணைந்துள்ளன. உயிருக்கு போராடுகிறவருக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில், இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி குறைந்தது 12 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

"இடியுடன் மழை வருகிறபோது, நீங்கள் ஒருபோதும் மரத்தின் கீழ் நிற்கக்கூடாது என்பதற்கு இந்த சோக சம்பவம் ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது" என தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News