உலகம்
31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை

தாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை

Published On 2022-05-18 11:04 IST   |   Update On 2022-05-18 11:04:00 IST
பர்கர் ஆர்டர் செய்யாததால் திகைத்த தாய், மகனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது அவன் ஆர்டர் செய்திருப்பதை அறிந்தார்.
டெக்சாஸ்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவரது 2 வயது மகன் பார்ரெட்.

இவன் தாயின் செல்போனை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது செல்போனில் இருந்த உணவு ஆர்டர் செய்யும் ஆப் மூலம் மெக்டொனால்டு கடையில் 31 சீஸ் பர்கர்களை குழந்தை பார்ரெட் ஆர்டர் செய்தான்.

சிறிதுநேரத்தில் 31 சீஸ் பர்கர்களுடன் ஊழியர் கெல்சி வீட்டுக்கு வந்தார். தான் பர்கர் ஆர்டர் செய்யாததால் திகைத்த கெல்சி, மகனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது அவன் ஆர்டர் செய்திருப்பதை அறிந்தார்.

31 பர்கர்களுக்கு 61.58 டாலரும் டிப்சாக 16 டாலரும் வழங்கி இருந்தான். ஆனால் மகன் மீது கோபத்தை காட்டாமல் அந்த பர்கர்களை மற்றவர்களுக்கு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து பேஸ்புக் பக்கத்தில், என்னிடம் 31 சீஸ் பர்கர்கள் இருக்கிறது.

யாருக்கு விருப்பம் இருந்தால் இலவசமாக தருகிறேன். எனது 2 வயது மகன் எப்படி ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்து இருக்கிறான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சிலர் கெல்சி வீட்டுக்கு வந்து பர்கர்களை வாங்கி சென்றனர். அப்போது செல்போனில் உள்ள ஆப்பை மகனிடம் இருந்து மறைத்து வைக்கும்படி ஆலோசனை வழங்கினர்.

இதுதொடர்பாக கெல்சி கூறும்போது, ‘எனது மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவன் படங்களை எடுத்துக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவன் பர்கர்களை ஆர்டர் செய்து உள்ளான்’ என்றார்.

Similar News