உலகம்
ஹம்சா ஷெபாஸ்

கடும் மோதலுக்கு பிறகு வாக்கெடுப்பு- பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக ஹம்சா ஷெபாஸ் தேர்வு

Published On 2022-04-16 17:06 GMT   |   Update On 2022-04-16 17:06 GMT
371 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 186 வாக்குகள் தேவை என்ற நிலையில் ஹம்சா 197 வாக்குகள் பெற்றார்.
லாகூர்:

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இம்ரான் கானின் பிடிஐ கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் எதிரணிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் ராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தது. எனவே, பஞ்சாப் மாகாண புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று சட்டசபை கூட்டப்பட்டது. 

இதில் ஆளும் பிடிஐ கூட்டணி சார்பில் பர்வேஸ் எலாஹி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கூட்டணி சார்பில் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அவையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், எலாஹி பலத்த காயமடைந்தார். 

சட்டசபை கூடியபோது, இம்ரான் கானின் பிடிஐ கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். துணை சபாநாயகர் மஜாரி தாக்கப்பட்டார். கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பிரிந்து எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவுதர முயன்ற பி.டி.ஐ. உறுப்பினர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். 

இந்த அமளிக்கு மத்தியில் முதல் மந்திரி பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இம்ரான் கானின் பிடிஐ மற்றும் அதன் கூட்டணி கட்சியான பிஎம்எல்-க்யூ ஆகிய கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தன. இந்த கூட்டணி வேட்பாளர் எலாஹி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினர்.

அதன்பின்னர் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி வேட்பாளரான ஹம்சா ஷெபாஸ் (வயது 48) வெற்றி பெற்றார். 371 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 186 வாக்குகள் தேவை என்ற நிலையில் ஹம்சா 197 வாக்குகள் பெற்றார். இவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் மூத்த மகன் ஆவார். 

ரூ.1400 கோடி பணமோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ஹம்சா. கடந்த ஆண்டு ரம்ஜான் சர்க்கரை ஆலை மற்றும் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு 20 மாதங்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News