உலகம்
இம்ரான்கான், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

பாராளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது- பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2022-04-07 18:35 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இம்ரான்கானுக்கு அரசுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
  
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம்  செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு  துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதினார். 

இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். 

இதை எதிர்த்து தாமாக முன் வந்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற  விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் பாராளுமன்ற சபைகளை கலைக்குமாறு அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகர் காசிம் சூரியால் ரத்துச் செய்யப்பட்டது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. 

இதையடுதது ஏப்ரல் 9 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான இந்த தீர்மானம் வெற்றி பெற்றால், புதிய பிரதமரை நாடாளுமன்றம் நியமிக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தனது கட்சி ஏற்கும் என்று இம்ரான் கான் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.


Tags:    

Similar News