உலகம்
ஜெயசூர்யா

இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் - கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

Published On 2022-04-07 13:21 IST   |   Update On 2022-04-07 13:21:00 IST
ஏற்கனவே முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
கொழும்பு:

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. 40 ஆயிரம் டன் டீசலை சமீபத்தில் கப்பல் மூலம் அனுப்பியது. இதேபோல அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் உதவிகளை வழங்கிய இந்திய அரசுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில் மக்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது.

இந்தியாவை எப்போதும் ஒரு அண்டை வீட்டாராக உங்களுக்கு தெரியும். எங்கள் நாட்டுக்கு அடுத்த பெரிய சகோதரர் எங்களுக்கு உதவுகிறார்.

நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் (மோடி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்.



எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. சில நேரங்களில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இலங்கை மக்களுக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலையாகும். இதனால்தான் மக்கள் வெளியே வந்து போராடுகிறார்கள்.

நிலைமையை சரியாக கையாளாவிட்டால் பேரழிவு ஏற்படும். இந்த வி‌ஷயங்கள் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. டீசல், எரிவாயு மற்றும் பால் பவுடருக்கு 3 முதல் 4 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு ஜெயசூர்யா கூறி உள்ளார்.

ஏற்கனவே முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

Similar News