உலகம்
இம்ரான் கான்

இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்

Published On 2022-03-20 21:43 IST   |   Update On 2022-03-20 21:43:00 IST
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய வெளியுறவுக் கொள்கையை பாராட்டி உள்ளார்.
இஸ்லாமாபாத்:

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது. இந்த தகவலை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசினார்.

கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இம்ரான் கான் பேசியதாவது:-

அண்டை நாடான இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதால் அதை பாராட்ட விரும்புகிறேன். குவாட் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியா, அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. எனது வெளியுறவுக் கொள்கையும் பாகிஸ்தான் மக்களுக்கு சாதகமாகவே இருக்கும். நான் யாருக்கும் பணிந்ததில்லை, என் தேசத்தையும் தலைவணங்க விடமாட்டேன்.

ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவிற்கு எதிராக இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் ஆதரவு கேட்டபோது மறுத்துவிட்டோம். ஏனெனில் அவர்கள் கோரிக்கை விடுத்ததன் மூலம் நெறிமுறையை மீறினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இணங்கினால் பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைத்திருக்காது.

நாம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் பங்கெடுத்ததால் 80,000 மக்களையும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் இழந்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News