உலகம்
ரஷிய ராணுவம்

வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் நெருங்கியது

Published On 2022-03-06 09:34 GMT   |   Update On 2022-03-06 09:34 GMT
சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.

சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் இருந்து வருகிறது.

இதற்கிடையே தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய படைகள் அணிவகுத்து வரும் செயற்கை கோள் புகைப்படம் வெளியானது. அப்போது தலைநகர் கீவ்வில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷிய படைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரஷிய படைகள் உக்ரைன் தலை நகர் கீவ்வை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் கீவ்வுக்கு மிக அருகில் ரஷிய படைகள் நெருங்கியுள்ளது.

இதனால் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது. மேலும் கீவ் நகரின் தெற்கு பகுதியில் உள்ள கனிவ் நீர்மின் சக்தி நிலையத்தை நோக்கி ரஷிய படைகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஷிய ராணுவத்தினர் 100 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News