உலகம்
உக்ரைன்- ரஷியா போர் பதற்றம்

எனக்கு பயமாக இருக்கிறது..! உக்ரைனில் கொல்லப்படுவதற்கு முன், ரஷிய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய மெசேஜ்

Published On 2022-03-01 16:47 IST   |   Update On 2022-03-01 20:39:00 IST
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.  

இதுகுறித்து ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா கூறியதாவது:-

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தனது தாய்க்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தியில்,  தான் பயப்படுவதாகவும், தனது ராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அந்த குறுஞ்செய்தியில், அம்மா, நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கே ஒரு உண்மையான போர் நடந்து கொண்டிருக்கிறது. நான் பயப்படுகிறேன். நாங்கள் அனைத்து நகரங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்களைக் கூட குறிவைக்கிறோம்.

மக்கள் எங்களை கடந்து செல்ல விடாமல் வாகனங்களின் கீழ் விழுகின்றனர். சக்கரங்களுக்கு அடியில் சிக்கி தூக்கி எறியப்படுகின்றனர். அவர்கள் எங்களை பாசிஸ்டுகள் என்று அழைக்கிறார்கள். அம்மா இது மிகவும் கடினமானது என்று கூறியிருந்தார்.

இது அவர் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. இந்த சோகத்தின் அளவை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கட்டிடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களிட்டு ரஷிய ராணுவம் தாக்குதல்?

Similar News