உலகம்
அமெரிக்க தூதரகம்

ஆபத்து... ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்கா அறிவுறுத்தல்

Published On 2022-02-28 16:17 GMT   |   Update On 2022-02-28 16:17 GMT
ரஷிய பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடிமக்கள் துன்புறுத்தப்படுவதற்கு சாத்தியம் உள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.
வாஷிங்டன்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ரஷியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று கூறிய நிலையில், தற்போது அங்குள்ள அமெரிக்கர்களை வெளியேறும்படி கூறி உள்ளது. 

ரஷியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு வழக்கமான அல்லது அவசரகால சேவைகளை வழங்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. அத்துடன், ரஷிய பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடிமக்கள் துன்புறுத்தப்படுவதற்கு சாத்தியம் உள்ளது. எனவே, அமெரிக்கர்கள் வெளியேறுவது நல்லது, என வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டதாக வெளியுறவுத்துறை கூறியது. அத்துடன், ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியேறும்படி  உத்தரவிட்டது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News