உலகம்
ஸ்டார்லிங்க் செயற்கைகோள்

சூரிய புயலில் சிக்கியதால் 40 செயற்கைகோள்கள் வளிமண்டலத்தில் எரிந்தன

Published On 2022-02-10 09:50 GMT   |   Update On 2022-02-10 09:50 GMT
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கியதால் எரிந்தன.
கேப்கெனவெரல்:

பூமியின் சுற்று வட்டபாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமார் 2 ஆயிரம் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலை தூர இடங்களுக்கு இணைய வழி சேவையை வழங்கி வருகிறது.

இந்த செயற்கைகோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கியதால் எரிந்தன.

கடந்த 4-ந்தேதி வளி மண்டலத்தில் சூரியபுயல் ஏற்பட்டது. இந்த சூரிய புயல் காரணமாக வளிமண்டலம் அடர்த்தியானது.

இதன் காரணமாக கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டு இருந்த 49 சிறிய செயற்கைகோள்களில் 40 செயற்கைகோள்கள் புவி வட்ட பாதையில் இருந்து விலகி மீண்டும் வளி மண்டலத்துக்குள் நுழைந்தன. அங்கு அவை தீப்பிடித்து எரிந்தன.

இன்னும் சில செயற்கை கோள்கள் புவி வட்ட பாதையில் இருந்து விலகும் நிலையில் உள்ளன. இந்த விபத்தை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்த சம்பவத்தால் புவி வட்ட பாதையிலோ பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இவ்வாறு அந்த நிறுவனம் கூறி உள்ளது. 
Tags:    

Similar News