உலகம்
ஜோ பைடன்

அடுத்த மாதம் ரஷியா, உக்ரைனை தாக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை

Published On 2022-01-29 01:43 GMT   |   Update On 2022-01-29 01:43 GMT
அடுத்த மாதம் (பிப்ரவரி) உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன் :

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷியா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷியா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “உக்ரைன் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தால், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து தீர்மானமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதை ஜனாதிபதி பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்” என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News