உலகம்
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததையும், அங்கு ஏராளமான படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் காணலாம்.

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: அமைதிப்படையை அனுப்பும் ரஷியா

Published On 2022-01-07 02:15 GMT   |   Update On 2022-01-07 02:55 GMT
கஜகஸ்தானில் மக்கள் புரட்சி, வன்முறையாக மாறியது. அதிபர் மாளிகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ரஷியாவில் இருந்து அமைதிப்படை வருகிறது.
மாஸ்கோ :

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான். இது சோவியத் ரஷியாவில் இருந்து உடைந்து வந்த நாடு. எண்ணெய் வளமிக்க அந்த நாட்டில் எல்.பி.ஜி. என்று சொல்லப்படுகிற திரவ பெட்ரோலிய வாயுவில்தான் பெரும்பாலான வாகனங்கள் ஓடுகின்றன. இந்த நிலையில், புத்தாண்டையொட்டி எல்.பி.ஜி. விலையை அந்த நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தியது.

இது அநியாயம், ஏற்க முடியாது எனக்கூறி விலை உயர்வுக்கு எதிராக அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் புரட்சி வெடித்தது.

வீதிக்கு வந்து மக்கள் போராடினர். அந்த நாட்டின் முக்கிய நகரமான அலமாட்டியில் மக்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது. போலீஸ் நிலையங்களை போராட்டக்காரர்கள் கையில் எடுத்தனர்.அலமாட்டியில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு டஜன் கணக்கிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.

கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 400 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 62 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

நேற்று முன்தினம் அலமாட்டியில் அதிபர் மாளிகைக்கும், மேயர் அலுவலகத்துக்கும் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தீ வைத்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இப்படி நாடு முழுவதும் வன்முறை பற்றி எரிகிறது. வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல்கள் பிரச்சினையின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் காசிம் ஜோமார்ட் டோகோயேவ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற 6 முன்னாள் சோவியத் நாடுகளின் உதவியை அதிபர் ஜோமார்ட் நாடினார். இதையடுத்து இந்த நாடுகளின் கூட்டு அமைப்பான சி.எஸ்.டி.ஓ. கவுன்சில் அமைதிப்படையை கஜகஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஒப்புதல் அளித்தது. இதை கவுன்சிலின் தலைவரான ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பஷின்யன் தெரிவித்தார்.
Tags:    

Similar News