செய்திகள்
விபத்து ஏற்பட்ட பகுதி

லெபனானில் மீண்டும் வெடிவிபத்து - 4 பேர் பலி

Published On 2020-10-10 13:51 GMT   |   Update On 2020-10-10 13:51 GMT
லெபனான் டீசல் டேங்க் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளால் ஏற்பட்ட அந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். லெபனான் நாட்டின் வரலாற்றில் அந்த வெடிவிபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள லெபனானில் அந்த வெடி விபத்தி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடிவிபத்தில் இருந்து தற்போது தான் பெய்ரூட் நகரம் தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், பெய்ரூட்டில் மேலும் ஒரு வெடிவிபத்து சம்பவம் தற்போது ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் நகரில் உள்ள தரியூ அல் ஜெடிடி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக டீசல் டேங்க் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த டீசல் டேங்க் வைக்கப்பட்டிருந்த குடியிருப்பில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென டீசல் டேங்க் இருந்த பகுதிக்கும் பரவியது. அப்போது டீசல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் குடியிருப்பில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த வெடிவிபத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில் மீண்டும் பெய்ரூட்டில் வெடிவிபத்து நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

Similar News