செய்திகள்

ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி

Published On 2019-05-19 18:38 GMT   |   Update On 2019-05-19 18:38 GMT
ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியானார்கள்.
பியுனோஸ் அயர்ஸ்:

மத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ். இங்குள்ள சுற்றுலாத்தலமான ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று முன்தினம் அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியாகி விட்டனர். தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலியான சுற்றுலாப்பயணிகளில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ தெரிவித்தார். 5-வது சுற்றுலாப்பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரிய வரவில்லை.

இந்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News