செய்திகள்

நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும் - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தகவல்

Published On 2019-04-17 02:29 GMT   |   Update On 2019-04-17 03:00 GMT
850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார். #NotreDameCathedralFire #NotreDame
பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.

அந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது.



தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது,

இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும். தேவாலயத்தை ஏற்கனவே இருந்ததைவிட மிக அழகாக கட்டுவோம். அடுத்த 5 வருடத்திற்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். மனித தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறைய முறை சரிசெய்துள்ளோம். அந்த வகையில் இதையும் விரைந்து சரிசெய்வோம் என்றார்.

இந்த தீவிபத்துக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், தேவாலயத்தை புதுப்பிப்பதற்கான நிதியும் குவிந்து வருகிறது. #NotreDameCathedralFire #NotreDame

Tags:    

Similar News