செய்திகள்

உலகின் மிகப்பெரிய விமானம் - முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது

Published On 2019-04-14 06:07 GMT   |   Update On 2019-04-14 08:44 GMT
உலகின் மிகப்பெரிய விமானம் தனது முதல் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. #Worldslargestairplane #largestairplane #PaulGAllen #Stratolaunch
நியூயார்க்:

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ கம்பெனியை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென்.

வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க இவர் தீர்மானித்தார்.

இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக (அமெரிக்கா நேரப்படி 13-4-2019 அன்று காலை 6.58 மணியளவில்) பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.

அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த ‘மெகா’ விமானம் புறப்பட்டு சென்றது.



மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இரட்டை விமானத்தைப் போன்ற உடலமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். இதை நிறுத்தி வைக்க ஒரு பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் தேவை.

ஆனால், இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த 15-10-2018 அன்று தனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. #Worldslargestairplane #largestairplane #PaulGAllen #Stratolaunch
Tags:    

Similar News