செய்திகள்

ஈரான் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Published On 2019-04-09 03:34 GMT   |   Update On 2019-04-09 03:34 GMT
ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஈரான் மீது மேலும் கூடுதல் தடைகளை விதிக்க உள்ளது. #IranianMilitaryForce #IRG #Trump
வாஷிங்டன்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் ஈரான் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் ஈரான் அரசு சில இடங்களில் ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

‘ஈரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன், அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது. ஈரான் மீதான அழுத்தத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. டிரம்பின் இந்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் கூடுதல் தடைகளை விதிக்க முடியும்.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு சற்றும் அஞ்சாத ஈரான் அரசு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #IranianMilitaryForce #IRG #Trump
Tags:    

Similar News