செய்திகள்

‘பிரெக்ஸிட்’ விவகாரம் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி

Published On 2019-03-19 22:16 GMT   |   Update On 2019-03-19 22:16 GMT
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #BrexitDeal #TheresaMay #JohnBercow
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.

ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.



ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

அதனை தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.

அதேசமயம், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது” என்றார்.

மேலும் அவர், “எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஓட்டுபோடும்படி அவர்களை கேட்க முடியாது” என கூறினார்.

சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

இதற்கிடையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்திரி சபையை கூட்டி தெரசா மே அவசர ஆலோசனை நடத்தினார். #BrexitDeal #TheresaMay #JohnBercow 
Tags:    

Similar News