செய்திகள்

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்

Published On 2019-03-14 12:10 IST   |   Update On 2019-03-14 12:10:00 IST
சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் இருந்து திருடிய பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. #ChinaRobberMercy
பீஜிங்:

திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான் செய்கிறார்கள். பணம், நகைகள், வாகனங்கள் போன்றவற்றை திருடுவதற்காக கத்தியினை காட்டி மிரட்டி, துன்புறுத்தி இரக்கமின்றி திருடிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சீனாவில் ஒரு திருடனின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் இணையத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார்.

பின்னர் இயந்திரத்தில் இருந்து வந்த பணத்தை எடுத்து அந்த திருடனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய திருடன், ஏடிஎம் இயந்திரத்தில் அப்பெண்ணின் பேலன்ஸை பார்த்துள்ளான். அதில் ஜீரோ பேலன்ஸ் காட்டவே, அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். இந்த காட்சி ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.



இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் அவரது செயலை பாராட்டியபோதும், அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வீடியோவிற்கு மீம்ஸ்களும், திருடனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஒருவர் தனது பதிவில்,  “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தை மட்டுமல்லாமல், கத்தி மற்றும் அணிந்திருந்த சட்டையையும் கொடுத்து சென்றுவிடுவான்” என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ChinaRobberMercy 
Tags:    

Similar News