செய்திகள்

அமெரிக்காவில் நீண்ட காலம் எம்பியாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு- அதிபர் டிரம்ப் இரங்கல்

Published On 2019-02-09 03:36 GMT   |   Update On 2019-02-09 03:36 GMT
அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். #JohnDingellDies #Trump
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க  சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்தார்.

2015ம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.



இந்நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் டிங்கெல் (வயது 92), நேற்று முன்தினம் காலமானார். மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு  பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #JohnDingellDies #Trump
Tags:    

Similar News