செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப்

Published On 2019-02-08 02:14 GMT   |   Update On 2019-02-08 04:08 GMT
ஈராக், சிரியாவில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump
வாஷிங்டன் :

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வான்தாக்குதல்களை நடத்த தொடங்கின.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கிருந்து தங்கள் நாட்டு படைகளை 30 நாட்களுக்குள் திரும்பப்பெற உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல், குடியரசு கட்சியினர் மற்றும் நட்பு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் டிரம்ப் தனது முடிவை தாமதப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘‘ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடம் பறிபோய்விட்டது. ஐ.எஸ். அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது. அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

அதே சமயம் அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தொடர்ச்சியான அழுத்தம் இல்லாதுபோனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். அமைப்பு தலைதூக்கும்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Trump
Tags:    

Similar News