செய்திகள்

ஈராக் நாட்டிற்கு டிரம்ப் திடீர் பயணம்- அமெரிக்க வீரர்களுடன் சந்திப்பு

Published On 2018-12-27 04:05 GMT   |   Update On 2018-12-27 04:05 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு திடீரென ஈராக் நாட்டிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #Trump #AmericanSoldiers
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள்  முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.



சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Trump #AmericanSoldiers
Tags:    

Similar News