செய்திகள்

பஹ்ரைன் நாட்டில் கொத்தடிமையாக இருந்த இந்திய பெண் மீட்பு

Published On 2018-12-24 10:32 GMT   |   Update On 2018-12-24 10:32 GMT
பஹ்ரைன் நாட்டில் அராபிய செல்வந்தர் வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்ட அதிகாரிகளை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராட்டியுள்ளார்.
மனாமா:

இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறையான சம்பளம், சரியான உணவு மற்றும் தங்கும் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு அவதிப்படுவதாக தெரிகிறது. இதில் ஆண்களின் நிலை சற்று சுமாராக இருந்தாலும் வீட்டு வேலை செய்வதற்காக இங்கிருந்து செல்லும் பல பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண்ணை அராபிய செல்வந்தர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது.

அந்த தகவலை அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் துரிதமாக களமிறங்கினர்.

இதற்கிடையில், தன்னிடம் சிக்கிய பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அந்த அராபிய செல்வந்தர், அந்த பெண்ணுக்காக நான் ஏகப்பட்ட பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று சவால் விட்டார்.

இதுதொடர்பாக, பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் போலீசார் துணையுடன் அந்த அராபிய செல்வந்தரின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கு கொத்தடிமை போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்டனர்.


விரைவாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியாக இருந்த பஹ்ரைன் அரசு அதிகாரிகளுக்கு தனது சார்பில் நன்றி தெரிவிக்குமாறும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சுஷ்மா சுவராஜ்  குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட இந்திய பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Indianwomanlocked #IndianwomanBahrain #Sushma
Tags:    

Similar News