செய்திகள்

அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் ஊழல் - துபாயில் இருந்த இடைத்தரகர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Published On 2018-12-04 14:47 GMT   |   Update On 2018-12-04 14:47 GMT
ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறிய அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் இருந்த பிரிட்டன் நாட்டு இடைத்தரகர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். #ChristianJamesMichel #AgustaWestlandscam
துபாய்:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.



இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இன்றிரவு அவர் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #ChristianJamesMichel #AgustaWestlandscam #VVIPchopperscam 
Tags:    

Similar News