செய்திகள்

தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை - அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்

Published On 2018-11-03 15:35 IST   |   Update On 2018-11-03 15:35:00 IST
எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. #NorthKoreathreatens #NorthKorea
பியாங்யாங்:

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.



இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்’ (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. #NorthKoreathreatens  #NorthKorea
Tags:    

Similar News