செய்திகள்

ராஜபக்சே அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் மந்திரி ஆனார்

Published On 2018-10-30 10:34 GMT   |   Update On 2018-10-30 10:34 GMT
ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa #DouglasDevananda
கொழும்பு:

இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

அமைச்சரவையில் 14 பேர் மந்திரிகளாக இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜபக்சே அமைச்சரவையில் வடகிழக்கு மாகாண தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து விவகாரம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ரனில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழரான சுவாமிநாதன் நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அப்படியே டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரி பதவி ஏற்ற பிறகு டக்ளஸ் தேவானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஏற்கனவே நான் மந்திரியாக இருந்தபோது மக்களுக்காக இடைவிடாது பாடுபட்டேன். நான் ஓய்வின்றி உழைத்ததை மக்கள் அறிவார்கள். இப்போது மக்களுக்காக உழைக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை வடகிழக்கில் போர் இல்லாத சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாடுபடுவேன்.

தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று முந்தைய ஆட்சியாளர் கள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் தமிழர்கள் மறுவாழ்வு பெற ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை மட்டுமே அவர்கள் பெற்றனர்.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான கோரிக்கை தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. இது தவிர காணாமல் போனவர்கள் விவகாரம், நிலங்கள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியதுள்ளது.

இந்த பிரச்சனைகளுக்காக தமிழர்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்.

தமிழர்களுக்கு தேவையானதைப் பெற்றுத்தர ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்று நடத்தும் சூழல் ஏற்படும்.

இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார். இவர் மீது சென்னை போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajapaksa #DouglasDevananda
Tags:    

Similar News