செய்திகள்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிப்பு

Published On 2018-10-16 11:36 GMT   |   Update On 2018-10-16 11:36 GMT
1400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய ஊழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #Pakistanhousingscam #Shahbazsharif
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே  ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம்  ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.  அவரது விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் ஷாபாஸ் ஷரிப் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதியின் முன்னர் ஆஜரான ஷாபாஸ் ஷரிப், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நான் பலகோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறேன். இதுவரை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளால் என்மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரத்தையும் உருவாக்க முடியவில்லை என கூறினார்

ஷாபாஸ் ஷரிப்பிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்குமாறு அரசுதரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும், ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவலை வரும் 30-ம் தேதிவரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி  நஜமுல் ஹஸன் உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
Tags:    

Similar News