செய்திகள் (Tamil News)

அமெரிக்காவில் உளவு வேலை பார்த்த சீனர் சிக்கினார்

Published On 2018-09-26 22:08 GMT   |   Update On 2018-09-26 22:08 GMT
அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றியது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சீனாவை சேர்ந்த ஜி சாக்குன் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். #ChineseNational #Spy
வாஷிங்டன்:

சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ஜி சாக்குனும் 2016-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், இவர் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றினார் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றுகிற சீன என்ஜினீயர்களையும், விஞ்ஞானிகளையும் குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரர்களாக இருப்பவர்களை ஜி சாக்குன் உளவு பார்த்தார் என்று கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவருக்காகத்தான் இவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜி சாக்குன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.  #ChineseNational #Spy
Tags:    

Similar News