செய்திகள்

தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் திடீர் சந்திப்பு: அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஆலோசனை

Published On 2018-09-18 08:53 GMT   |   Update On 2018-09-18 08:53 GMT
அமெரிக்காவின் தொடர் நிர்பந்தங்களுக்கு இடையே தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். #KimJongUn #MoonJaein #Denuclearisationtalks
பியாங்யாங்:

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.

இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.



இந்நிலையில், அமெரிக்காவின் தொடர் நிர்பந்தங்களுக்கு இடையே  தென்கொரியா அதிபர் மூன் ஜே இன், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இருவரும் விரைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KimJongUn #MoonJaein #Denuclearisationtalks
Tags:    

Similar News