செய்திகள்

பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் இறக்குமதிக்கு தடை

Published On 2018-09-11 05:56 GMT   |   Update On 2018-09-11 05:56 GMT
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என்று பிரதமர் இம்ரான்கான் தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். நிதி மந்திரி ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.

இதனால் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகி உள்ளது. அதை சரிகட்ட சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை பிரதமர் இம்ரான்கான் விரும்பவில்லை. நாடு யாரையும் சார்ந்து இருக்க கூடாது என அவரும், கட்சி நிர்வாகிகளும் பேசி வருகின்றனர்.


எனவே, சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் போன்கள், பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் ரூ.66 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. #Pakistan #Smartphone #ImranKhan
Tags:    

Similar News